தமிழகத்தில் பொது போக்குவரத்து துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும்நிலையில், ரயில் போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியிருந்த தேசிய அளவிலான ஊடரங்கு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலக்கெடுவும், வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மருந்துக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் செயல்பட துவங்கியுள்ள நிலையில், தமிழத்தில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்தை விரைவில் துவக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளில் ரயில் போக்குவரத்தை துவங்கவும், மாநில அரசு திட்டமிட்டு, அதற்காக ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மதுரை - விழுப்புரம், கோவை - மயிலாடுதுறை, திருச்சி - நாகர்கோவில், காட்பாடி - கோவை வழித்தடங்களில், ஏசி வசதி அல்லாத ரயில் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.
இந்த தடங்களில், ரயில் சேவைகளை துவக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபிறகு, ரயில் சேவை துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களின் சேவை வழக்கம்போல இருக்கும். ஆனால், வைகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னை செல்லாமல், விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை வரை செல்லாமல், காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து, மதுரை, கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பொது போக்குவரத்தை விரைவில் துவக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் சேவைகள் துவங்கும்பட்சத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவைகளையும் இந்த குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் 50 சதவீத பயணிகளே அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், போக்குவரத்து நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தவிர்க்கும் வகையில், பயணிகளிடம் இருமடங்கு கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்களின் பணியாற்றி வரும் ஊழியர்களின் வசதிக்காக, விழுப்புரம் மண்டலத்தில் 49 மொபசல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிலோ மீட்டர் ஒன்றிற்கு தங்களுக்கு ரூ.48 செலவு பிடிக்கிறது. ஆனால், எங்களுக்கு தற்போது கிலோ மீட்டருக்கு ரூ.28 மட்டுமே கிடைக்கிறது. இழப்பு வருவாயை, அரசு தர சம்மதித்து உள்ளது. ஆம்னி பஸ் நிறுவனங்களும் 100 சதவீத கட்டண உயர்வுக்கு அனுமதி அளிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.