தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மூன்றாவது முறையாக, மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா போர்வீரர்களுக்கு கப்பற்படை மரியாதை
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், கொரோனா முழுமையாக இல்லாத நிலை எட்டிய பிறகே டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவிடக் கோரியும், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீ்திமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், மதுபானக் கடைகள் முன் கூட்டம் கூடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள போதும், கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கி.மீ., தூரத்திற்கு நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் நின்று மதுவை வாங்கி் சென்றுள்ளனர். அந்த வரிசையில் தமிழகத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். அதேபோல, ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக விலகலை பின்பற்ற முடியாது எனவும், 40 நாட்களுக்கு பின் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகளை திறப்பதாக அறிவித்துள்ளதன் மூலம், மக்கள் வேலைக்கு செல்ல அரசு விரும்பவில்லை என்றே தெரிகிறது எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், தற்போது மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றச்சம்பவங்களும், விபத்துக்களும் அதிகரிக்கக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார். மதுபான விற்பனை என்பது அத்தியாவசிய நடவடிக்கை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், மதுபானம் வாங்க பணம் கேட்டு பெண்களை துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு முரணான வகையில், மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாரயணா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் கே.பாலு சார்பில் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு மனுதராரக இணைத்து விசாரக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அதே போல் மேலும் இருவர் தரப்பில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யபட்டது.
பின்னர் வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தில், டாஸ்மாக் மது பான கடைகளை திறந்தால் நோய் தொற்று பெருமளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துவிடும், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல, டாஸ்மாக் கடைகள் நோய் தொற்று பரவும் ஹாட்ஸ்பாட் மையமாக மாறிவிடும், சட்டம்-ஒழுங்கு பெருமளவில் பாதிக்கப்படும், உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாமல் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள் என்பதை காரணம் கூறி அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது, தொடர் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அதிலிருந்து விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும், மருத்துவரீதியாக தற்போது மதுக் கடைகள் திறப்பது உகந்ததல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வரும் நிலையில் அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது 17 ஆம் தேதி வரை மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்று வாதிடபட்டது .
இதற்கு பதில் அளித்து வாதிட்ட தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நாங்களும் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்குவதற்கான விரிவான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்று வாதிட்டார்
அப்போது டாஸ்மார்க் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மதுகடைகளை திறப்பது தொடர்பாக அரசு மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மீண்டும் 2.30 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் மதுவிற்பனையை ஆன் லைனில் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும், டாஸ்மாக் மது விற்பனையின்போது, சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளைப் போல மதுக்கடைகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக்கில் மொத்த விற்பனை செய்யப்பட மாட்டாது. தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுகள் மீதான தீர்ப்பு மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசு, ஆன் லைனில் பணம் செலுத்தி அது தொடர்பாக விவரங்களும் டாஸ்மாக்கில் கொடுத்தால், 750 மிலி கொண்ட 2 பாட்டில் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்தது. மேலும், நேரடியாக டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பணம் செலுத்தினால் 750 மிலி கொண்ட மது பாட்டில் ஒன்று மட்டுமே வழங்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுவிற்பனை குறித்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் பில் வழங்க வேண்டும் அதில் வாங்கியவரின் பெயர் ஆதார் எண் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். மதுபாட்டில் பெற்றதில் இருந்து 3 நாட்கள் கழித்து தான் அடுத்தது மது வாங்க முடியும். பார்கள் செயல்படாது, கடை அருகே குடிக்க அனுமதியில்லை. இதில் குளறுபடி நடந்தாலோ, சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்றாலோ டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை தெரிவித்தது.
மேலும், நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என்று தெரிவித்ததோடு, நிதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி டாஸ்மாக் கடை திறக்க எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 14 ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.