ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, 'எஸ்' எழுத்தை நீக்கிவிடலாமா? - நீதிபதிகள் கேள்வி
Chennai high court : கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
சித்த மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதோடு மட்டுமல்லாது, மத்திய அரசு, அதன்மீது பாராமுகமாக செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Advertisment
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவ துறைகளான ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ துறைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுர்வேதா துறைக்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சித்த மருத்துவ துறைக்கு 437 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை படித்த நீதிபதிகள், மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வது ஏன் எனவும், சித்த மருத்துவத்துக்கு, பிற மருத்துவ துறைகளை விட குறைந்த நிதி ஒதுக்கியுள்ளது துரதிருஷ்டவசமானது எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், ஆயுஷ் அமைச்சகத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் 'எஸ்' என்ற எழுத்தை நீக்கிவிடலாம் என கண்டனம் தெரிவித்தனர். இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil