தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 அமைச்சர்கள் 8 எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்லூர் ராஜூ மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் @SellurKRajuoffl-வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்!
எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) July 10, 2020
ஸ்டாலின் நலம் விசாரிப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததாகவும், விரைவில் உடல் நலம் பெறுவார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிற்குள்ளான எம்எல்ஏக்கள்
அதிமுக எம்எல்ஏக்கள்
ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி, உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகரன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜீனன்
திமுக எம்எல்ஏக்கள்
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் (மறைவு), ரிஷவந்தியம் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி அரசு, செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான்.
அம்மன் அர்ஜூனன், சதன் பிரபாகரன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சிகிச்சை முடிவடைந்த நிலையில் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil