கொரோனாவிற்கு பிரகு நாட்டை புனரமைப்பது எப்படி என்பது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முன்னதாக. கமல்ஹாசன் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தார், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம் நாட்டின் பொருளாதாரத்தில் 77 சதவீத சொத்துகள், 10 சதவீத மக்களின் கையில் உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், அது பெரும்பணக்காரர்களின் சொத்துகளைப் பறித்து சரி செய்யப்படக் கூடாது. அடித்தட்டில் இருக்கும் மக்களின் பொருளாதார நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தினால் வலுப்படுத்தி அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துவதால் மட்டுமே சரி செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல் தனது அறிக்கையில் உழவுக்கு வந்தனை செய்ய வேண்டும் என்றும் அமைப்பு சாரா தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்றும் வருமான சமத்துவமின்மை சீர் செய்தல் அவசியம் என்றும் வறுமை ஒழிப்பு முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், கொரோனா நோய்க்கு பிறகான பொருளாதார சிக்கல்கள் தொடர்பாக, கமல்ஹாசன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்
"ஜனநாயக ஆட்சி சரியான முறையில் நடக்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது"
* "இந்த காணொலி கொரோனா நோய்க்கு பிறகான பொருளாதார சிக்கல்களை பற்றியது"
* "பெண்கள் பாதுகாப்பு, கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்ற நீண்ட கால சிக்கல்கள் உள்ளன"
* "சுகாதார குறைபாட்டால் ஒவ்வொரு ஆண்டும் 16 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்"
* "உடல் நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை காட்டாத நாடு, ராணுவ பலத்தை காட்டுவது வீண்"
* "பொருளாதார மந்த நிலையால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற திரைநட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்களை ஒப்பிடுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, அதுகுறித்த விழிப்புணர்வு விவகாரங்களில், நடிகர் கம் அரசியல்வாதி கமல்ஹாசனின் பங்களிப்பு அளப்பரியதாகவே உள்ளதாக மக்கள் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil