கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மட்டும் ஒரேநாளில் 22 பேர் அதிகரித்ததை தொடர்ந்து நகரின் மற்ற பகுதிகளிலிருந்து மேலப்பாளையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் தனது கோரத் தாண்டவத்தை காட்ட துவங்கியுள்ளது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் பின்வரிசையில் இருந்த தமிழ்நாடு, நேற்று ( மார்ச் 31) ஒரேநாளில் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
டெல்லி நிஜாமுதீனில் மார்ச் முதல் வாரம் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களில், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக சுகாதார துறை ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் 1131 பேர் கலந்து கொண்டனர். அதில் 515 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 616 பேர் தாமாக முன்வந்து மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்திருந்தார். நேற்றுவரை 124 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், டெல்லி சென்ற நபர்களை அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களில் நேற்று ஒருநாளில் மட்டும் நெல்லையில் 22 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லையில் ஏற்கெனவே ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
கலெக்டர் உத்தரவு : திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் உத்தரவின் பேரில், போலீஸ் கமிஷனர் தீபக் தமோரின் ஆணைப்படி, மேலப்பாளையம் பகுதி, நகரத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது. இந்த தனிமை உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலப்பாளையம் செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியிலிருந்து வெளியேயும், வெளியில் இருந்து அப்பகுதிக்கும் மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் அப்பகுதியில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலப்பாளையம் பகுதியில் .உள்ள மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் இப்பகுதிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ளவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் சேவையை அப்பகுதி மக்களுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை மேற்கொண்டுள்ளது. மக்கள், தேவையில்லாமல், வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலப்பாளையத்தில், வாகனங்களின் இயக்கம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ சோதனைகளுக்காக வெளியே வரும் மக்கள், அதற்கான தகுந்த ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும். இதற்காக தனியாக ஒரு பதிவேடு வைக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து திரும்பும் மக்கள் அதில் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.
மேலப்பாளையம் பகுதியில் போதிய அளவில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனை சாவடிகளில், போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா பிரகாஷ் சதீஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.