தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 885 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு, சென்னையில் தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு குறைவாக பதிவாகியுள்ளது. அதே போல, மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று சரிந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5,000க்கு குறைவாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, பரிசோதனை விவரம், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 192 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை ஆய்வகம் 66, தனியார் 126) இன்று 85,130 மாதிரிகள் ஆர்டி-பிசிஆர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 90 லட்சத்து 31ஆயிரத்து 696மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்று 83,625 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 87 லட்சத்து 80 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இன்று (அக்டோபர் 19) மட்டும் 3,536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரத்து 936 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 4,515 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6 லட்சத்து 42 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 38,093 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 49 பேர் (அரசு மருத்துவமனையில் 24 பேர், தனியார் மருத்துவமனையில் 25 பேர்) உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 10,691பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 885 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவை - 290, செங்கல்பட்டு - 241, சேலம் - 192, திருவள்ளூர் - 172 என்ற அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, சென்னைக்கு வெளியே வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு, தெற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், சென்னையில் 1,000க்கும் குறைவாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வந்தது.
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், ஒரு கட்டத்தில் தினசரி 2,000 தொற்றுகள் பதிவாகிவந்தது. தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கையால் மெல்ல சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து 1,000க்கும் குறைவாக தொற்று பதிவானது. ஆனால், கடந்த சில வாரங்களாக சென்னையில் தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் 1,000க்கு மேல் பதிவானது. இதனால், சென்னை மக்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று 885 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மீண்டும் 1,000க்குள் பதிவாகியுள்ளது.
சென்னையில் தொற்று குறைந்துள்ள நிலையில், சென்னைக்கு வெளியே பிற மாவட்டங்களிலும் தொற்று குறைந்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் சில வாரங்களுக்கு முன்பு 300-500-க்கு மேல் என தொற்று பதிவாகி வந்த நிலையில், மாவட்டங்களில் வெகுவாக தினசரி தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.