தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட 45 வயது நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 27 பேர்களை தமிழக சுகாதாரத் துறை கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது.
ஓமனில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பிப்ரவரி 28-ம் தேதி சென்னை வந்த 45 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது உறவினர்கள் 8 பேர் தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்துள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், 19 பேர் அவருடன் தொடர்பில் இருந்த தொற்று ஏற்படுவதற்கான குறைந்த ஆபத்துள்ளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 19 பேரில், அவருடன் அருகில் அமர்ந்து ஓமனில் இருந்து விமானத்தில் பயணம் செய்த இரண்டு விமானப் பயணிகள், அவரது டாக்ஸி டிரைவர், அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்கள் உள்பட அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அந்த நபர் ஆரம்பத்தில் குளிர், காய்ச்சலுக்காக அருகிலுள்ள மருத்துவரை அணுகியிருந்தார். இருப்பினும், சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும், அவரது அறிகுறிகள் குறையாததால், அவரது மருத்துவர் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினார். பிறகு, அவர் அங்கிருந்து மார்ச் 4-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அவருடைய ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியுட் ஆஃப் பிரவெண்ட்டிவ் மெடிசைன் நிறுவனத்துக்கு சோதனை செய்ய அனுப்பப்பட்டது. அந்த சோதனையில் உறுதிப்படுத்த முடியாத நிலையில், புதிய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோரோனா வைரஸ் பாஸிட்டிவ் என சனிக்கிழமை முடிவு வந்தது.
தமிழகத்தில், சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இதுவரை 1.13 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளை கொரோனா பரிசோதனைக்காக திரையிடப்பட்டுள்ளனர். அவர்களில் 1077 பயணிகள் 28 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 54 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் முடிவுகள் வந்துள்ளன. இது மட்டுமில்லாமல், கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் மாநில சுகாதாரத்துறை 1243 பேர்களை மருத்துவக் கண்காணிப்பு செய்து வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"