தேனியில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மன உளைச்சலால் திடீரென ஆடையில்லாமல் தெருவில் ஓடி மூதாட்டி ஒருவரின் குரல் வலையை கடித்து கொன்ற விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது. 19 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் கொரோன பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வருகிறது. சிலர், தாங்ளாகவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர் என்று கூறி சுயமாக அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள், அவர்கள் வீடுகளில் இந்த வீட்டில் வெளிநாட்டிலிருந்து வந்தவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஸ்டிக்கர் ஒட்டிவருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன், இலங்கையில் இருந்து திரும்பி வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மன உளைச்சலால் திடீரென ஆடையில்லாமல் தெருவில் ஓடி மூதாட்டி ஒருவரின் குரல் வலையை கடித்து கொன்ற விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகயில், மணிகண்டன் கடந்த இலங்கையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக இலங்கையில் இருந்து ஊர் திரும்பிய அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதால் மன ரீதியாக தொந்தரவுக்குள்ளாகி இருந்துள்ளார். நேற்று இரவு மணிகண்டன் திடீரென ஆடையில் இல்லாமல் தெருவில் ஓடியுள்ளார். வீட்டுக்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டி நாச்சியம்மாள் குரல் வளையைக் கடித்து குதறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மண்கண்டனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த நாச்சியம்மாள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மூதாட்டி நாச்சியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.” என்று தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு தெருவில் ஆடையின்றி ஓடிய இளைஞர் மணிகண்டன் மூதாட்டியின் குரல்வளையைக் கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கோ அல்லது கொரோனா ஏற்படும் பயத்தை போக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணுக்கு ஆலோசனை தேவைப்படுபவர்கள் தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவது நல்லது.