சித்த மருத்துவர்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொன்னால் அரசு சந்தேகிப்பது ஏன்? ஐகோர்ட் கேள்வி

சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

By: Updated: July 9, 2020, 11:41:00 PM

சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் கிருபாகரன் வி.எம் வேலுமணி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவர் தன்னிடம் கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என தெரிவிக்கும் போது, அதை பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டுமென கேள்வி எழுப்பினர்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”‘ என்ற குறளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,
சித்த மருத்துவர்கள் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறினாலே சந்தேகப்படும் சூழல் நிலவுவதாக கவலை தெரிவித்தனர்.

60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும்,
அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையை அவர் நாடியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அந்த மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டனர்.

ஆரம்பத்திலேயே அவரது மருந்தை அரசு பரிசீலனை செய்திருந்தால், இந்நேரம் அந்த மருந்தே கூட வெளி வந்திருக்கும் என தெரிவித்தனர்.

மத்திய – மாநில அரசுகளால் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாகவும்,
அது புறக்கணிக்கப் படுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அலோபதி சிகிச்சை என்ற பெயரில் கபசுர குடிநீர் கொடுத்து சித்த மருத்துவ சிகிச்சை தான் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

எந்தவித உயிரிழப்பும் இன்றி சிறைவாசிகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளை குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபுவிற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அரசிடம் இத்தகைய மனப்போக்கு இருந்தால் அது யாருக்குமே பயனின்றி போய்விடுமெனவும், தன்னிடம் தொற்றுக்கு மருந்து உள்ளதாக யாரேனும் தெரிவித்தால் அதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினர்.

தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.

* கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?

* அதனை பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?

* தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?

* தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனரா?

* மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி ஹோமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது?
இவற்றுக்கான முறையான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர்..

தொடர்ந்து,நம்நாட்டு மருத்துவர்களுக்கு போதிய கட்டமைப்பையும், உரிய பண உதவியும் செய்து அவர்களின் கண்டுபிடிப்பை ஊக்குவிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை வழக்கில் தானாக முன்வந்து இணைத்ததோடு, நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus covid 19 siddha doctor chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X