கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 5 பேர் பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோன வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நோய் பாதிப்பு அளவைப் பொருத்து சில தளர்வுகளுடன் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மாநிலத்தில் தினமும் கோரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, அரசின் நடவடிக்கைகளை செய்தியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசின் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேலும் புதிதாக 759 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,512 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து 710 பேருக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 49 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 9,876 பேர் ஆண்கள், 5,631 பேர் பெண்கள் மற்றும் 5 பேர் திருநங்கைகள் ஆகியோர் அடங்குவர். அதே போல, சென்னையில் நேற்று மட்டும் ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,989 ஆக அதிகரித்துள்ளது” என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Advertisment
Advertisements
மேலும், தமிழகத்தில், கொரோனா பாதிப்பால் நேற்று 5 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் கொரோனா வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்த பிறகு இறந்துள்ளார். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 98ல் இருந்து 103 ஆக உயர்ந்து உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"