தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 40,192 ஆக அதிகரித்துள்ளது. இதில், தமிழகத்தில் தொடர்ந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 5,000க்கு குறைவாகவும், 5,500க்குள்ளும் கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, பரிசோதனை விவரம், கொரோனா நோயாளிகளின் உயிரிழப்பு உள்ளிட்ட விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 192 கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் (அரசு பரிசோதனை ஆய்வகம் 66, தனியார் 126) இன்று 90,242 மாதிரிகள் ஆர்டி-பிசிஆர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 88 லட்சத்து 56 ஆயிரத்து 280 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதே போல, இன்று 88,574 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மொத்தம் 86 லட்சத்து 7 ஆயிரத்து 812 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இன்று (அக்டோபர் 17) மட்டும் 4,295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 83 ஆயிரத்து 486 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 5,005 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பினர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் 40,192 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 57 பேர் (அரசு மருத்துவமனையில் 30 பேர், தனியார் மருத்துவமனையில் 27 பேர்) உயிரிழந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 10,586 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,132 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவை - 339, ராணிப்பேட்டை - 240, செங்கல்பட்டு - 231, திருவள்ளூர் - 218, காஞ்சிபுரம் - 148, நாமக்கல் - 131, ஈரோடு - 122 என்ற அளவில் இன்று கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தொடர்ந்து, வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் கொரோரோனா வைரஸ் தொற்று குறையாமால் அதிகரித்து வருவது மாவட்ட நிர்வாகத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"