Coronavirus : சீனாவுக்கு சென்று வந்ததால் கொரோனா வைரஸ் (2019-nCov) அறிகுறி இருப்பதாகக் கூறி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனர். தவிர, சீனா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து வந்த 240 பேர் 28 நாட்கள் கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் அந்த எண்ணிக்கை 300 ஐத் தொட்டது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருவதால், இந்தியா தனது நுழைவு வாயில்களை அதிக எச்சரிக்கையுடன் வைத்திருக்கிறது. ஹாங்காங்கில் இருந்து சீனா வழியாக நேற்று முன்தினம் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தாம்பரம் சேலையூரை சேர்ந்த சிட்டாள்(வயது 40) என்ற பெண் வந்தார். சளி மற்றும் காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் வெள்ளிக்கிழமை வந்தார். அவர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சிய மருத்துவர்கள், அந்தப் பெண்ணை ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வந்த அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி ஏதுமில்லை என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
”தற்போது வரை நோயின் முக்கிய அறிகுறிகளை நாங்கள் காணவில்லை. நோயாளி நிலையாக இருக்கிறார்” என்றும் டீன் டாக்டர் ஆர் ஜெயந்தி கூறினார். அதோடு பொங்கலுக்கு முன்பு நாடு திரும்பிய 25 வயதுடைய மற்றொரு நோயாளி அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரது உடல்நிலையும் சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரல் தாக்குதல் அறிகுறிகள் இல்லாததால், சோதனைகளுக்கான மாதிரிகள் எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.
நோய்க்கான அறிகுறிகளாக சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் காய்ச்சலைப் பிரதிபலிப்பதாக தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். “இந்த அறிகுறிகள் உள்ள அனைத்து நோயாளிகளையும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். தற்போதைய நிலவரப்படி, வைரஸிற்கான சோதனை வசதி அரசாங்கத்திடம் மட்டுமே உள்ளது” என்று பொது சுகாதார இயக்குனர் டாக்டர் கே. கோலாண்டா சுவாமி கூறினார்.