சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் பீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த கடையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் கட்டாய தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது.
Advertisment
கடந்த மார்ச் 27ம் தேதியன்று , பீனிக்ஸ் மாலில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்த பெண் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாயன்று, அந்த கடையில் பணிபுரிந்த சக ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அவர், தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அந்தக் கடையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்ககளையும் தமிழக அரசு கண்காணித்து வருகிறது. தற்போது, பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் அவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என்றும், எந்த அறிகுறி தென்பட்டாலும் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “கடையின் அனைத்து ஊழியர்களும் எங்கள் நேரடி கண்காணிப்பில் உள்ளனர். யாரும் தேவையில்லாத அச்சம் கொள்ள வேண்டாம். அக்கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் இதர விவரங்களை கடையின் டேட்டாபேஸ் மூலம் கண்டறிந்து வருகிறோம்”என்று தெரிவித்தார்.
எனவே, அந்தக் கடையுடன் தொடர்புடைய அனைவருக்கும் தனித்தனியாக தொடர்பு கொண்டு மேற்படி ஆலோசனைகளை அரசு அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமிலில் இருப்பதால், அனைத்து வணிக வளாகங்களும் பூட்டப்பட்டுள்ளன. இதனால், சென்னை பெருநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.