கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு தற்போது திரும்பியுள்ள புலம்பெயர் தமிழர்களால், குறிப்பாக மகாராஷ்டிராவிலிருந்து திரும்பியவர்களால் தமிழகத்தில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தை ஒரு காட்டு காட்டியுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்த நிலையில், தற்போது மேலும் அதிகரித்து தற்போது 11 ஆயிரம் என்ற அளவை கடந்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவால், வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் தமிழகம் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் திரும்பினர்.
கடந்த வாரம் தமிழகம் திரும்பியவர்களில், 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 210 பேர் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள் ஆவர். குஜராத்திலிருந்து 9 பேர், கர்நாடகாவிலிருந்து 3 பேர், ராஜஸ்தான், ஆந்திராவிலிருந்து தலா 2 பேர், தெலுங்கானாவிலிருந்து 3 பேர், கத்தார் நாட்டிலிருந்து 2 பேர், குவைத்தில் இருந்து 4 பேர், மாலத்தீவில்இருந்து 6 பேர், மலேசியாவில் இருந்து 5 பேர், வங்கதேசத்தில் இருந்து 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவிலிருந்து கொரோனா பாதிப்போடு 216 பேரில், 91 பேர் நெல்லை மாவட்டத்தையும், தூத்துக்குடி (30), சிவகங்கை (14), கள்ளக்குறிச்சி (28), மதுரை (13) மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி அவர்களிடம் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று தணிந்திருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளவர்களால், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை திறம்பட கையாளும் பொருட்டு, மாநில சுகாதாரத்துறையினர் விழிப்புடனும் துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளான மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலும் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களே அதிகம் வாழ்கின்றனர். தமிழகம் திரும்பிய இவர்கள் தற்போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவிலிருந்து வேன், பஸ், கார்களின் மூலம் தமிழகம் திரும்பியவர்கள், மாநில எல்லையில் தடுத்துநிறுத்தப்பட்டு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் மாவட்ட எல்லைகளில் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாது, சென்னை கோயம்பேடு சந்தையும் முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.