வெறிச்சோடிய சாலைகள் , மூடப்பட்டுள்ள கடைகள், சாலைகளில் வாகனப்போக்குவரத்து இல்லாமை, டாஸ்மாக் கடைகள் கூட மூடல்...இதுதான் இன்றைய மதுரையின் நிலை. கொரோனா பாதிப்பு அதிகரிப்பால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், அங்கு பாதிப்பு குறைந்தபாடில்லை என்பதே உண்மை.
சென்னையில் மே 2ம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 1,300 ஆக இருந்த நிலையில், அதேமாதம் 7ம் தேதி இந்த எண்ணிக்கை 2,600 ஆக அதிகரித்தது. அதேநிலைதான் தற்போது மதுரையிலும் ஏற்பட்டுள்ளது. ஜூன் 26ம் தேதி நிலவரப்படி, மதுரையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,400 ஆக இருந்தநிலையில், ஜூலை 1ம் தேதி இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது.
சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 6.53 சதவீதமாக உள்ள நிலையில், மதுரையில் இந்த விகிதம் 15 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூன் மாத பிற்பகுதி வரை, மதுரையில் கொரோனா பாதிப்பு அந்தளவிற்கு அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. மே 16ம் தேதியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 150 ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக 25 நாட்கள் தேவைப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், அங்கு பாதிப்பு இரட்டிப்பாக 12 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டதாக தேசிய தொற்றுநோயியல் மைய விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த பலர் தற்போது மதுரைக்கு திரும்பியுள்ளதாலேயே, இங்கு கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையிலான பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் பலபகுதிகளிலும் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை போன்று மதுரையிலும் மக்கள்தொகை அதிகம் உள்ளதாலேயே, பரவல் அதிகமாக உள்ளது. மேலும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மூலமாகவும், அவர்களுடன் தொடர்பு உடையவர்கள் மூலமாகவும் தொற்று அதிகமாக பரவிவருவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அனுபவித்துவரும் கசப்பான உணர்வு, மதுரையிலும் இடம்பெற்றுவிட நாம் காரணமாக இருந்துவிடக்கூடாது. மதுரையில் அந்தளவிற்கு கொடிய பாதிப்பு இல்லை என்றபோதிலும், பரவை காய்கறி சந்தையின் மூலமே, கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பரவை காய்கறி சந்தையில், தொற்று கண்டறியப்பட்ட வர்த்தகர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூன் 1ம் தேதி நிலவரப்படி மதுரையில் 268 பாதிப்புகளே இருந்தன. அதாவது மாநிலத்தின் மொத்த பாதிப்பில் இது 1 சதவீதமே ஆகும். ஒரு மாதத்தில், இந்த எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து தற்போது 2,858 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் சென்னையின் பங்கு ஜூன் மாதம் 67 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 64 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
சென்னையில், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்கள் கூட சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடினர். அவர்கள் தற்போது வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்களில் பலர் தற்போது மதுரை வந்துள்ளதாலேயே இங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. மற்ற ஊர்களிலிருந்து குறிப்பாக சென்னையிலிருந்து வந்தவர்களை கண்காணித்து அவர்களை தொடர்ந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். சிகிச்சை அளிப்பதற்கு தேவையான படுக்கைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி வருவதாக சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.