சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 9 இடங்கள் மற்றும் அதன் அருகில் வசிக்கும் மக்கள், வீடுகளுக்குள்ளும் முக கவசம் அணிந்தே இருக்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையில், அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர் மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட 9 பகுதிகளில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த 9 பகுதிகளில் அதிக கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும்போது மட்டுமின்றி, வீட்டினுள் இருக்கும்போதும் முக கவசம் அணிந்து இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வர அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் வீட்டினுள் இருக்கும்போதும் முக கவசம் அணி வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று தற்போது அதிகளவில் இருப்பதால், இந்த குறிப்பிட்ட பகுதிகள் ஹாட் ஸ்பாட்களாக மாறியுள்ளன. இதிலிலிருந்து மேலும் தொற்று பரவாமல் இருக்கவே, வீட்டில் இருக்கும்போதும் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டிருப்பதாக கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இன்றி பொதுஇடங்களில் தேவையில்லாமல் சுற்றி வருவது அவர்களிடையே இந்த தொற்றை பற்றிய போதிய அறிவு இல்லாததையே காட்டுவதாக மாநகராட்சி உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த 9 பகுதிகளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களுக்கு தேவையான முக கவசங்களை வழங்க சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 9 பகுதிகளிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலம் எனவும், மேலும் அங்கிருந்து 2 கி.மீ தொலைவிலான பகுதிகளை இடைப்பட்ட மண்டலப்பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.
சென்னையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ள தினமும் 2500 வீடுகளில் டோர் செக்கப் என்பதனடிப்படையில் வீடு வீடாக சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த சோதனையை, சுகாதார பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். இந்த சோதனையை, 28 நாட்கள் கால அளவிற்கு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த சோதனைக்காக, 1500 அங்கண்வாடி ஊழியர்கள், 750 சுகாதார செவிலியர்கள், 1500 பள்ளி ஆசிரியர்கள், 2500 சுகாதார தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு சென்று திரும்பியதாக கணிக்கப்பட்ட 19,120 பேர் தற்போது அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்ளில் 1,120 பேர் தங்களது தனிமைக்காலத்தை நிறைவு செய்துள்ளனர்.
கொரோனா தொற்று தற்போது இரண்டாவது நிலையை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில், தொற்று 3ம் நிலையை எட்டுவதற்கு முன்பாக, சமூக பரவலை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கமிஷனர் பிரகாஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.