Coronavirus outbreak : Mobile Grocery and Vegetable shops in Chennai : தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சென்னையில் இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அடிக்கடி வெளியே வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றார்கள்.
Advertisment
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பெயரில் மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறி கடைகள் ஆகியவை குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கி வருகிறது. இந்நிலையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அத்தியாவசிய தேவைகளுக்காக சென்னையில் பொதுமக்கள் கூட கூடிய 75 சந்தைகளில் 60 சந்தைகள் பேருந்து நிலையங்கள், காலிமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
இவ்விடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து நடமாடும் மளிகைக்கடைகள் மற்றும் காய்கறி அங்காடிகள் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில், சென்னை முழுவதும் சுமார் 5000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 2000 சிறிய மோட்டார் வாகனங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்க நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் செயல்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கியுள்ளது சென்னை மாநகரம். வணிகர்களுக்கு சிறப்பு அடையாள அட்டையை சென்னை மாநகராட்சி வழங்க உள்ளது. சென்னை மாநகராட்சியின் பதாகைகள் இந்த வண்டிகளில் பொருத்தப்பட்டிருக்கும். எனவே மக்கள் அவற்றை அடையாளம் கண்டு எளிதில் பொருட்களை வாங்க உதவும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ரிப்பன் பில்டிங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பணிகள் பிரிவு துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களின் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil