இந்தியாவில் இந்நாள் வரை (மார்ச்-26) 624 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், 568 ஆக்டிவ் வழக்குகள் உள்ளன என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் இந்த தொற்று காரணமாக 13 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாடு, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களது முதல் இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, பிரதம மந்திரி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,"கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா ஒரு போரை நடத்தி வருகிறது, அடுத்த 21 நாட்கள் நடைபெறும் இந்த போரில் நாம் வென்றாக வேண்டும், இல்லையேல் 21 ஆண்டுகள் பின்தங்கிய சூழலுக்கு சென்றுவிடுவோம்" என்றார்.
மேலும், தற்போது வெள்ளை ஆடை உடுத்தியிருக்கும் மருத்துவர்கள் தான் கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அரசு துறைகள் அனைத்தும் முடிக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக, மருத்துவத்துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் ஜி.சந்திர சேகர் என்கிற மருத்துவர், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைக்கும் கடந்த மாதம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
இவர் ஸ்டான்லி மருத்துவமனையில், சீனியர் ரெசிடென்ட் ஆப் சர்ஜெரி என்ற பொறுப்பில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, இந்த மருத்துவ அதிகாரி தூத்துக்குடி மருத்துவ கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த செயலுக்கு, பல்வேறு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த அவசர கால சூழலில் தமிழக அரசின் செயல்பாடுகள் கடும் பின்விளைவுகளை எற்படுத்தும் என்று சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரசு வெளியிட்டுள்ள பணியிட மாற்றம் உத்தரவில்," ஸ்டான்லி மருத்துவமனையில் சீனியர் ரெசிடென்ட் ஆப் சர்ஜெரி பதவியில் இறுக்கும் ஜி.சந்திர சேகர் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பொது அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.
மேலே, குறிப்பிடப்பட்டுள்ள அந்த மருத்துவ அதிகாரி மார்ச்.24ம் தேதி பிற்பகல் முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவர் உடனடியாக, பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர் பணியாற்றி வந்த பதவியில் இருந்து மேலும் அவரை கீழிறக்கியுள்ளது.