கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக தவறான வதந்திகள் பரப்பியதால் நாமக்கல்லில் சுமார் 19 கோடி முட்டைகள் தேங்கி நிற்கின்றன. இதனால், தமிழக முட்டை கோழி பண்ணையாளர்கள் சந்தைப்படுத்தும் சங்கம், சிக்கன், முட்டை மூலம் கொரோனா பரவுவதை யாராவது நிரூபித்தால் உடனடியாக அவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இந்தியாவும் தப்பவில்லை. கொரோனா அச்சத்தால் வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்கள், மால்கள், சினிமா தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடன்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா அச்சத்தால், சில தொழில்களும் பாதிக்கப்புக்கு உள்ளாகியுள்ளன. சிலர் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் கோழி இறைச்சி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக தவறாக வதந்திகளைப் பரப்பியதால் தமிழகத்தில் கோழி இறைச்சி விலை அதள பாதாளத்துக்கு சரிந்தது.
கொரோனா வைரஸ் வதந்தியுடன் கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில வதந்திகளைப் பரப்பியதால் மக்கள் அச்சத்தில் கோழி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்ததால், கோழி இறைச்சியின் விலை சரிந்ததோடு மட்டுமில்லாமல், கோழி முட்டை தவிர்க்கத் தொடங்கினர். இதனால், தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் முட்டை கோழிகள் வளர்ப்பு பண்ணைகளில் 19 கோடி கோழி முட்டைகள் தேங்கி இருக்கின்றன. இதனால், முட்டை கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கோழி இறைச்சி பற்றியும் கோழி முட்டைகள் பற்றியும் தவறாக வதந்தி பரப்பப்பட்டதால், மக்கள் கோழி இறைச்சி கோழி முட்டை சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து, தமிழக முட்டை கோழி பண்ணையாளர்கள் சந்தைப்படுத்தும் சங்கம் (டி.என்.இ.பி.எஃப்.எம்.எஸ்) ஒவ்வொரு நாளும் இந்தத் தொழில் 8 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நமக்கல் மண்டலத்தில் மட்டும் 19 கோடி முட்டைகள் தேக்க மடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக முட்டை கோழி பண்ணையாளர்கள் சந்தைப்படுத்தும் சங்கத்தின் செய்தித்தொடர்பாளர், நமக்கலில் செவ்வாய்க்கிழமை கோழி பண்ணையாளர்களுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவின் மைசூரிலும் கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் காரணமாக எங்களால் மற்ற மாநிலங்களுக்கு முட்டைகளை கொண்டு செல்ல முடியவில்லை. மறுபுறம், விடுப்பு காரணமாக , பள்ளிகளுக்கு முட்டை வழங்குவதும் பாதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவியதால் பொதுமக்கள் அதிக அளவு உட்கொள்ளும் முட்டையைப் பற்றி பீதியடைந்தனர். இதன் விளைவாக, நாமக்கல் மண்டலத்தில் 19 கோடி முட்டைகள் தேங்கி நிற்கின்றன. இருப்பினும், நாங்கள் பல கிராமங்களில் நேரடி முட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளோம்.
இப்போதைக்கு, நாங்கள் முட்டைகளை குளிர்பதன இடத்தில் வைக்க திட்டமிட்டுள்ளோம். சில கோழி பண்ணையாளர்கள் முட்டைக்கு மானியம் வழங்குமாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவிடம் கேட்டுக் கொள்கிறார்கள். அதன் தலைவர் மட்டுமே மானியம் வழங்க முடிவு செய்ய முடியும்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பெரும் இழப்பைச் சமாளிக்க கோழி பண்ணையாளர்கள் இந்த மோசமான சூழ்நிலையில் வங்கிக் கடன்களைப் பெற போராடுகிறார்கள்.
2006-ம் ஆண்டில் பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டபோது, கோழி வளர்ப்புத் தொழிலையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற குறைந்த வட்டியுடன் போதுமான கடன்களை வழங்கிய வங்கியாளர்களை அணுகினோம்.
இதுபோன்று, புதிய கடன்களை வழங்க விரும்பும் வங்கியாளர்களை சந்திக்க முடிவு செய்துள்ளோம். தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை வங்கியாளர்கள் நீட்டித்தால், நாங்கள் சிறிது நிம்மதி அடைவோம். அதனால் எங்களால் மன வேதனையை தவிர்க்க முடியும்.” என்று கூறினார்.
மேலும், கோழிப் பண்ணையாளர்கள் தமிழக முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதுள்ள பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தனர்.
அதோடு, சமூக ஊடகங்களில் போலியான, தவறான செய்திகள் பரவாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்கள் நல திட்டங்களுக்கு மாநில அரசு அதிக அளவில் பணம் செலவு செய்கிறது. இது போல, கோழி அல்லது முட்டையை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே நிலைமை தொடர்ந்தால், நாமக்கல் பகுதியில் 50 சதவீத கோழி பண்ணைகள் குறுகிய காலத்திலேயே மூட வாய்ப்பு உள்ளது என்று கவலை தெரிவித்தார்.
முன்னதாக, கோழி பண்ணையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய என்.இ.சி.சி தலைவர் பி.செல்வராஜ் எதிர்காலம் மிகவும் மோசமாக இருக்கும். எனவே, ஒரு முட்டைக்கு ரூ.2 என அடிமட்ட விலை நிர்ணயிக்க என்.இ.சி.சி திட்டமிட்டுள்ளது என்று கூறினார்.
இந்த கூட்டத்தில், கோழி பண்ணையாளர்கள், “கொரோனா வைரஸ் முட்டை மற்றும் கோழி மூலம் பரவுகிறது என்று யாராவது நிரூபித்தால், அவர்களுக்கு உடனடியாக ரூ.1 கோடி பரிசுத் தொகையை வழங்கத் தயாராக உள்ளதாக அறிவித்தனர். மேலும், மாநிலத்தில் முட்டை வியாபாரத்தை மேம்படுத்த என்.இ.சி.சி மேலும் விளம்பரங்களை வழங்க வேண்டும் என்று கூறினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"