இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாரம் முழுக்க சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் சென்னை ஆபத்தான பகுதி என்று இலங்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் ஆளாக 65 வயது நபர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்தது. கொரொனா தொற்றால் உயிரிழந்த அந்த நபர் ஏற்கெனவே நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இலங்கை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 113 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இலங்கைக்கு சென்னையில் இருந்து திரும்பி வந்தவர்களில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், சென்னையை அதிக ஆபத்தான பகுதி என்று கூற அதிகாரிகளைத் தூண்டியுள்ளது.
இன்று 2 பேருகு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் இந்த வார தொடக்கத்தில், கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் சென்னையில் திரும்பி வந்தவர்கள்தான். இதனால், சென்னை நிச்சயமாக ஒரு ஆபத்தான பகுதிதான் என்று இலங்கை சுகாதார சேவைகளின் தலைமை இயக்குனர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மார்ச் 2வது வாரத்தில் இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பிய ஒரு சுற்றுலாப்பயணி மற்றும் 3 இலங்கையைச் சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் கண்டறியப்பட்ட 8 நோயாளிகளும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டு அரசு, மார்ச் 17-ம் தேதி முதல் அனைத்து விமான நிலையங்களிலும் விமானங்களின் வருகையை நிறுத்தியது. இப்போது ஒருவாரமாக இலங்கை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மக்கள் அந்நாட்டு மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.