கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் மார்ச் 31வரை மூட உத்தரவிட்டார். அதோடு பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி பொதுமக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்:
* பொது மக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்
* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்
* மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள் (Markets), திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்குமாறும், தனிமனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
* பொது மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்
* கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம் எனவும்
*பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும்,
அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,
* அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை
அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* நோய்க்கான அறிகுறி உள்ள பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
* கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.
மேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் நாளை (17.3.2020) முதல் நடைமுறைக்கு வரும்.
கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"