தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கிக்கொண்டிருகிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரையடுத்து, தேனியைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவி இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
விழுப்புரம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த இவர் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர். இவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா வார்டில் 67 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெல்லி மாநாட்டுக்குச் சென்றுவந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கோவிட் – 19 பாசிட்டிவ் 51 வயது ஆண், நேற்று இரவு மூச்சுத் திணறல் அதிகமாகி இன்று காலை 7.44 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவரின் உடல் விழுப்புரம் சிங்காரத்தோப்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
அதே போல, தேனியைச் சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்டவரின் மனைவி கொரோனா பாதிப்பால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்புக்கு ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று விழுப்புரத்தை சேர்ந்த ஒருவரும், தேனியைச் சேர்ந்த ஒருவரும் பலியானதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.