கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பலரும் கை சுத்திகரிப்பானை வாங்கிவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு கை சுத்திகரிப்பான் இருந்தால் போதும். மற்றவர்கள் சாதாரண சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவினாலே போதுமானது என்று பொது சுகாதாரத்துறையினுடைய வல்லுனர்கள் கூறுகிறார்கள்” என்று கூறினார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வியாழக்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கேள்வி: கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க கை சுத்திகரிப்பான், சோப்பு போட்டு கழுவுவது எது சரியானது?
பதில்: கை சுத்திகரிப்பான் பயன்படுத்துவது பற்றி நமக்கு சுத்திகரிப்பான்தான் வேண்டுமா என்று கேட்பவர்களுக்கு, என்னுடைய பதில், கை சுத்திகரிப்பானைப் பொருத்தவரைக்கும் மருத்துவமனையில் இருக்கக் கூடிய எங்களுடைய மருத்துவர்கள், செவிலியர்கள், பாரா மெடிக்கல் பணியாளர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு கை சுத்திகரிப்பான் இருந்தால் போதும். மற்றவர்கள் சாதாரண சோப்பு போட்டு நன்றாக தேய்த்து கழுவினாலே போதுமானது என்று பொது சுகாதாரத்துறையினுடைய வல்லுனர்கள் கூறுகிறார்கள் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.
அப்போது இருமல் வந்ததால் அமைச்சர் விஜய பாஸ்கர் இருமினார். அப்போது இதை உங்கள் டிவியில் போட்டுவிடாதீர்கள் என்று கூற செய்தியாளர்கள் அனைவரும் குபீர் என சிரித்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: பொதுவாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் கை சுத்திகரிப்பான்களை எங்களுடைய மைக்ரோ பயாலஜி குழு அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள். ஏற்கெனவே ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தேவையான கை சுத்திகரிப்பானை அவர்களே சொந்தமாக தயாரித்தார்கள். இப்போது டீன் ஃபார்மகாலஜி டீம் ஸ்டேன்லியம் என்ற தேவையான கை சுத்திகரிப்பானை அவர்களே தயாரிக்கிறார்கள்.
கேள்வி: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளி பற்றி?
அமைச்சர் விஜயபாஸ்கர்: நேற்று ரொம்ப தெளிவாக சொன்னேன். இன்றும் தெளிவாக சொல்கிறேன். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் பாதிப்புடன் வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத் தக்க பொறியாளர் நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்களின் அதி தீவிரமான கண்காணிப்பில் மிக சிறப்பான முறையான கூட்டு மருந்து சிகிச்சையெல்லாம் வழங்கப்பட்டு அவருக்கு நல்லமுறையாக் சிகிச்சை செய்து, மத்திய அரசின் நெறிமுறைகளின்படி அவருக்கு கட்டாயமாக 2 பரிசோதனை எடுக்கப்பட்டது. அந்த 2 மாதிரிகளிலும் கொரோனா நெகட்டிவ்வாக வந்த பிறகு அவர் கொஞ்ச நாள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனை கண்காணிப்பில், அதற்கு அடுத்து மருத்துவமனை சிறப்பு வார்டில் இருந்து அவர் தற்போது நலமுடன் திரும்பி இருக்கிறார். அதனால், என்னுடைய அன்பான வேண்டுகோள், அவர் எங்கே இருக்கிறார்? காஞ்சிபுரத்தில்தான் இருக்கிறாரா? வேறு எந்த வீட்டில் இருக்கிறார்? மாமா வீட்டில் இருக்கிறாரா? சித்தப்பா வீட்டில் இருக்கிறாரா என்று தயவு செய்து கண்டுபிடிக்க வேண்டாம். நோயாளியின் நலன் கருதி, மருத்துவ அறம் கருதி தெரிவிக்க முடியாது. அதற்குப் பிறகு சமூகப் பரவல் வந்துவிடக் கூடாது என்று கருதி அவர் மருத்துவமனையில் தற்போது இல்லை. அவர் மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இருந்தாலும் நாங்கள் அவருக்கு தேவையான் அறிவுரைகள் வழங்கி உங்களுடைய நலன் கருதியும் அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உங்களுக்கு வேண்டிய இடத்தில் வீட்டு தனிமையில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி இருக்கிறோம். அதனால், தயவு செய்து அவரைப் பற்றி விவரங்களைக் கேட்காதீர்கள். இன்னும் 14 நாட்களுக்குப் பிறகு அவர் உங்களை (ஊடகங்களை) சந்திப்பார். அதனால், தயவு செய்து அதுவரை நீங்கள் பொறுத்திருங்கள். அதில் எந்த பார்வையும் உங்களுக்கு வேண்டாம்.
கேள்வி: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை அரசே தனியாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அது பற்றி?
அமைச்சர் விஜயபாஸ்கர்: எங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்படைந்த நாடுகளில் இருந்து வருகிறவர்களை அறிகுறி இருந்தால் அவர்கள் அப்படியே ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்படுகிறார்கள். அறிகுறி இல்லை என்றால் நாங்கள் தேவையானவர்களை எங்களுடைய பூந்தமல்லி பயிற்சி மையத்துக்கு கொண்டு சென்று அறிகுறிகள் இல்லாமல் ஹைக் ரிஸ்க் இருந்தால் மருத்துவர்கள் அந்த ஐபிஹெச் தனிமைப்படுத்துகிறோம். அறிகுறி இல்லாமல் இருப்பவர்களை வீட்டுக்கு போய் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
இந்த நடைமுறை எல்லாமே ரொம்ப சரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. சரியாக இருப்பதால்தான் தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. அப்படி எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது.
கேள்வி: நீங்கள் சொல்வது போல, விமான நிலைத்திற்கு வந்த 58 விமானப் பயணிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு பரிசோதனையும் செய்யப்படவில்லை. பூந்தமல்லிக்கும் அழைத்துச் செல்லப்படவில்லை.
அமைச்சர் விஜயபாஸ்கர்: சர்வதேச விமான நிலையத்தில், பரிசோதனைகள் ரொம்ப முறையாக நடந்துகொண்டிருக்கிறது. நீங்கள் அதை தனியாகப் போய் கண்காணிக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னையில்லை. நாங்கள் அதை தொடர்ந்து பின்பற்றிவருகிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.