சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பணிபுரிந்து வரும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. இதையடுத்து சென்னையில், அனைத்து தரப்பினருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்கள், காவல்துறையினர் என பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பணியில் இருந்த 147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆர்பிஎப் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கு உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil