மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடைபெற்ற ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அவரின் நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி பொன்னி விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர்
இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ஆரம்பக்கட்ட விசாரணையில் அரசு சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்ய முடியாது எனவும் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்த தேவையில்லை எனவும் ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை இதனை மீறி விசாரணை நடத்துவதாகவும் வாதிட்டார். குற்ற விசாரணை நடைமுறைச் சட்டத்தின் படியே ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை தனக்கான ஒரு சுற்றறிக்கை வைத்துக் கொண்டு அதன்படி விசாரணை நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும் வாதிட்டார்.
மேலும், தாங்கள் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடத்துவதற்கான போதுமான அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும் ஆனால் அதனை லஞ்ச ஒழிப்புத்துறை அதனை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். பொது ஊழியருக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தப்படுவதற்கு ஆளுநரிடம் மட்டுமே அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருப்பது தேவையற்று வழக்கை இழுத்தடிக்கவும், வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை பொறுத்தவரை சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும். அதனை உயர்நீதிமன்றம் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலை என வாதிட்டார்.
அறப்போர் இயக்கத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், தமிழக அரசின் மூத்த அமைச்சருக்கு எதிராக மாநில அரசு துறை நடத்தப்படும் விசாரணை என்பது நியாயமாக நடைபெறாது. எனவே அந்த விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் விதிகளின்படி மூன்று மாதத்திற்குள் ஆரம்ப கட்ட விசாரணையை முடித்து இருக்க வேண்டும் எனவும் சில சிக்கலான மற்றும் அரிதான வழக்குகளில் மட்டுமே மேலும் கூடுதலாக ஒரு மாதம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி ஆரம்ப கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை தொடங்கியதாகவும் ஆனால் சுமார் ஒரு வருடம் ஆகியும் விசாரணை இன்னும் முடிக்கவில்லை என தெரிவித்தார்.
பொத்தாம் பொதுவாக புகார் அளிக்கவில்லை எனவும் ஒரு புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இணைத்து அளிப்பதாகவும். ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்யவில்லை. கோவை மாநகராட்சியில் குறிப்பிட்ட அந்த இரண்டு ஒப்பந்ததாரர்கள் மட்டுமே அனைத்து ஒப்பந்தங்களையும் எடுப்பதாகவும் சில மணி நேர இடைவெளியில் இவர்கள் ஒரே ஐபி இணையத்தள முகவரி மூலமாகவே அவர்கள் பதிவேற்றம் செய்ததாகவும் தெரிவித்தார். எனவே இதில் முறைகேடு நடைபெற்றது என்பதற்கான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக இருப்பதாகவும் வாதிட்டார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் அது லஞ்ச ஒழிப்புத் துறையின் புதிய சட்டத்திற்கு எதிராகவே அந்தத் துறை செயல்படுவதை இதன் மூலம் உறுதியாகிறது என வாதிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ. நடராஜன் மனுதாரர்கள் புகார் மனு மீது ஆரம்பக்கட்ட விசாரணை முடிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையினை விசாரணை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் அளித்திருப்பதாகவும் மேற்கொண்டு அவர் தான் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.