அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான நிதி முறைகேடு புகார் தொடர்பாக விசாரனை நடத்த தமிழக அரசு இன்று விசாரணைக் குழு அமைத்துள்ளது. விசாரணைக் குழு அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறிய சூரப்பா இது குறித்து ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால், தமிழக அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வுகளைத் தவிர, தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர் தேர்வுகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. தமிழக அரசு இந்த உத்தரவிட்ட நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அளிப்பது சரியில்லை என்று கருத்து தெரிவித்தார். ஏ.ஐ.சி.டி.இ அமைப்பும் தேர்வு இல்லாமல் மாணவர்களை தேர்ச்சி அடைய வைப்பது கல்வி தரத்தை பாதிக்கும் என்று தெரிவித்தது. ஆனால், தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்று தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆளும் கட்சியிலும் துணை வேந்தர் சூரப்பாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது நிதி முறைகேடு, பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடு, தேர்வுத்தாள் மறு மதிப்பீட்டில் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு விசாரணைக் குழு அமைத்துள்ளது.
1978ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணைக் குழு தலைவர் நீதிபதி கலையரசன் தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிப்பார் என்று தமிழக அரசு ஆணை தெரிவித்துள்ளது.
மேலும், சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இயக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் எல்லா வகையிலும் அண்ணா பல்கலைக்கழக சட்டம் 1978 - உடன் துணை வேந்தர் சூரப்பாவின் நிர்வாகக் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு சிலைகல் ஒத்துப்போகிறதா என்பதை விசாரிக்கும்.
துணை வேந்தர் சூரப்பாவின் நிர்வாக காலத்தில், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பில் செய்யப்பட்ட தற்காலிக நியமனங்கள் மற்றும் பிற ஆட்சேர்ப்புகளையும் நீதிபதி கலையரசன் விசாரிப்பார். கட்டணம், உதவி, நன்கொடைகள், மானியங்கள் போன்றவற்றில் அவர் தனது நிர்வாகக் காலத்தில் பெறப்பட்ட தொகைகள் குறித்தும் விசாரிப்பார்.
அவரது நிர்வாகக் காலத்தில் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரின் தரப்பிலும் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா அல்லது உத்தியோகபூர்வ பதவியை துஷ்பிரயோகம் செய்ததா என்பதையும் விசாரணைக் குழு விசாரிக்கும். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற மறுபடியும் ஏற்படுவதைத் தடுக்க இதுபோன்ற பொருத்தமான வழிகளையும் வழிகளையும் பரிந்துரைக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த ஏ.சுரேஷ், சி.வரதராஜன், அண்ணா பல்கலைக்கழகத்தை காப்பாற்றுங்கள் இயக்கத்தின் செல்லதுரை மற்றும் ஆர்.அதிகேசவன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது புகார் அளித்துள்ளனர்.
இதில், திருச்சியைச் சேர்ந்த ஏ.சுரேஷ் முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பிய புகாரில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழல் பரவலாக இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் அதன் உறுப்பு கல்லூரிகளிலும் தற்காலிக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் லஞ்சம் வசூலிப்பதில் சூரப்பாவும் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
சி.வரதராஜன் அளித்துள்ள புகாரில், தேர்வு அலுவலகம் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அலுவலக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்களின் புகாரின் அடிப்படையிலேயே, தமிழக அரசு இந்த விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் செல்வி அபூர்வா நவம்பர் 11ம் தேதி விசாரணைக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த விசாரணைக் குழு 3 மாதங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு நிதி முறைகேடு புகார்கள் தொடர்பாக விசராணை குழு அமைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தான் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.