திருச்சி மாவட்ட இணை சார்பதிவகம் எண் 3-ன் சார் பதிவாளராக முரளி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஜூலை வரை பணியற்றினார்.
இந்த காலக்கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து, அரசுக்கு ரூ.2 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொதுவாக சார் பதிவாளர்கள், தங்களது அதிகாரத்திற்கு உள்பட்ட பகுதிகளில், ஊராட்சி ஒன்றியங்கள், பஞ்சாயத்துகளில் விவசாய நிலங்களுக்கு வரன்முறை கோரி வரும் மனுதாரர்களின் விண்ணப்பங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்த பிறகு தான் கூராய்வு கட்டணம், வரன்முறை கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணங்களை பெற வேண்டும். அதன்பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை சென்றுள்ளது.
திருச்சி மாவட்ட இணை சார்பதிவகம் எண் 3-ன் சார் பதிவாளராக முரளி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வேலை செய்தார். இவர் தனது கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உத்தரவை மீறியும், அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையிலும் போலி ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது.
இதனை ஆவண எழுத்தர்களான அல்லித்துறையை சேர்ந்த கங்காதரன், பிரபு, சின்னக்கடைத்தெருவை சேர்ந்த சக்திவேல் மற்றும் தென்னூர் காயிதேமில்லத் நகரை சேர்ந்த சையது அமானுல்லா, மேலசிந்தாமணியை சேர்ந்த முகமது சலீம், பாலக்கரையை சேர்ந்த முகமது உவைஸ் ஆகிய 6 பேர் செய்து வந்ததாகவும், இதற்கு உடந்தையாக சார்பதிவாளர் முரளி இருந்து வந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தநல்லூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் போலி ஸ்டாம்ப், போலி முத்திரையை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ.2 லட்சத்து 13 ஆயிரத்து 405 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சார்பதிவாளர் முரளி, கங்காதரன், பிரபு, சக்திவேல் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்