/indian-express-tamil/media/media_files/2025/10/26/watchman-jailed-for-2-years-in-trichy-2025-10-26-11-04-23.jpg)
ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கு: திருச்சி வீட்டு வசதி வாரிய காவலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் மனைப் பட்டா வழங்குவதற்காக ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில், 2-வது குற்றவாளியான காவலாளிக்கு (வாட்ச்மேன்) திருச்சி ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
வழக்கின் பின்னணி:
திருச்சி தென்னூர், சங்கீதபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் 1995-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் திருச்சி நவல்பட்டு திட்டத்தில் தனது பெயரிலும், தனது மனைவி மற்றும் மகள் பெயரிலும் 3 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ய மனு செய்திருந்தார். 1995 நவம்பரில் 3 மனைகளும் ராமலிங்கத்திற்கு ஒதுக்கப்பட்டன. 2010 நவம்பரில் மனைகளுக்குரிய மீதித் தொகையை அவர் வாரியத்தில் செலுத்தினார்.
07.01.2011 அன்று தனது பெயருக்குரிய பத்திரத்தைப் பெற்ற ராமலிங்கம், மனைவி மற்றும் மகளின் பத்திரங்களுக்காக வாரிய அலுவலக உதவியாளர் மாரிமுத்து என்பவரை அணுகியுள்ளார். பத்திரங்களைத் தர மாரிமுத்து காலதாமதம் செய்ததால், 24.03.2011 அன்று மீண்டும் அவரைச் சந்தித்தார் ராமலிங்கம். அப்போது, பத்திரங்களை விடுவிப்பதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்ட பத்திரத்திற்காகவும் அலுவலக உதவியாளர் மாரிமுத்து ரூ.3,000 கையூட்டாகக் கேட்டுள்ளார். பேரம் பேசியதில், ரூ.500 குறைத்துக் கொண்டு ரூ.2,500 தருமாறு மாரிமுத்து வற்புறுத்தியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமலிங்கம் 24.03.2011 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் 25.03.2011 அன்று பொறி வைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அலுவலக உதவியாளர் மாரிமுத்து, ராமலிங்கத்திடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற ரூ.2,500 தொகையில், தனக்காக ரூ.1,500-ஐயும், கிரையப் பத்திரம் தயாரிக்க உதவியாக இருந்த அதே அலுவலகத்தில் காவலாளியாகப் பணியாற்றிய பெர்னத் ஐசக் என்பவருக்கு ரூ.1,000-ஐ பெற்றபோது, அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இரா. அம்பிகாபதி தலைமையிலான குழுவினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.
தீர்ப்பு விவரம்:
இந்த வழக்கு திருச்சி, ஊழல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முதல் குற்றவாளிக்கு வழக்கொழிவு: வழக்கில் முதல் குற்றவாளியான அலுவலக உதவியாளர் மாரிமுத்து, 10.04.2024 அன்று இறந்துவிட்டதால், அவர் மீதான குற்றம் வழக்கொழிவு (Charge Abate) செய்யப்பட்டது. 2-வது குற்றவாளியான காவலாளி பெர்னத் ஐசக் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றம் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டது.
நீதிபதி புவியரசு, பெர்னத் ஐசக்கிற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us