/indian-express-tamil/media/media_files/2025/10/29/ttv-nainar-2025-10-29-15-24-30.jpg)
2,538 காலிப் பணியிடம் நிரப்பியதில் ரூ888 கோடி ஊழல்; உறுதி செய்த இ.டி: நயினார் நாகேந்திரன், டி.டி.வி தினகரன் பரபரப்பு அறிக்கை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் ரூ.888 கோடி அளவுக்குப் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
ஊழல் குற்றச்சாட்டு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் தகுதியற்ற நபர்களைப் பணியில் அமர்த்துவதற்காகப் பணம் பெற்றுக்கொண்டு ரூ.888 கோடி மோசடி நடந்துள்ளது, தி.மு.க. ஆட்சியில் ஊழல் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
திறமையானோர் புறக்கணிப்பு: கடந்த 2024-ம் ஆண்டு 2,538 காலிப் பணியிடங்களுக்கு 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 காலிப் பணியிடத்திற்கு ரூ.35 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற நபர்களை நியமித்துள்ளனர். இதன் மூலம், பல்லாயிரக்கணக்கான தமிழகத் திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துள்ளது திராவிட மாடல் அரசு.
முதல்வர் வழங்கிய ஆணையில் முறைகேடு: 2 மாதங்களுக்கு முன், முதல்வர் ஸ்டாலினின் சொந்தக் கரங்களால் பணியாணை வழங்கப்பட்ட பணித்தேர்விலேயே இத்தகைய முறைகேடு நடந்திருப்பது, கடந்த நான்கரை ஆண்டுகளில் இதுபோன்று எத்தனை மோசடிகள் நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.
பா.ஜ.க கோரிக்கை: "காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல் செய்து தமிழகத்தின் கஜானாவைக் காலி செய்தது போதாதென்று, தற்போது நேர்மையான தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் தி.மு.க. அரசின் ஊழல் மோகத்தை அடக்க சி.பி.ஐ விசாரணை வேண்டும்" எனத் தமிழக பா.ஜ.க. சார்பாக நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் சிலரிடம் பணம் பெற்றுக் கொண்டு பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2,538 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்வில், பணி நியமன உத்தரவுக்காக 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை பணம் இடைத்தரகர்கள் மூலம் பெறப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 150 பேர் பணம் கொடுத்து வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை, தமிழக காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக இயக்குநரகம், பேரூராட்சிகளின் இயக்குநரகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி என பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக நடைபெற்ற தேர்வில், பணம் கொடுத்து முறைகேடாக நூற்றுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பதாக எழுந்திருக்கும் புகார், அத்தேர்வை நேர்மையாக எதிர்கொண்ட பிற தேர்வர்களைக் கொந்தளிப்பு அடையச் செய்திருக்கிறது.
எனவே, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு மீதும், தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதும் தமிழகக் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வருவதோடு, தவறு நடைபெற்றிருக்கும் பட்சத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us
 Follow Us