பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் ஆலோசனை மையங்கள் அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலா உறவினர் இளவரசியின் மகளான கிருஷ்ணபிரியா தான் நடத்தி வரும் கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளபோதும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் கொடுத்த பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் பெயர் அரசாணையில் வெளியிடப்பட்ட சம்பவம் சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்கள் மத்தியில் மன குமுறலையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெண்களின் பெயர்கள் வெளியாகாமல் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, இதுபோன்ற குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல் நிலையத்திலேயே உரிய ஆலோசனை வழங்கி அவர்களை மன ரீதியாக தேற்றுவதற்கு காவல் நிலையங்களில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும்,
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசின் உள்துறை மற்றும் சமூக சீர்திருத்த துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.