கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் வந்த ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரிடம் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த இளைஞரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் என்பதும், கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை அருகே ஒரு வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. உடனடியாக இளவரசனின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு மேலும் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் 13 பண்டல்கள் 2,000 ரூபாய் நோட்டுகளும், 5 பண்டல்கள் 500 ரூபாய் நோட்டுகளும், வெட்டப்படாத 2,000 ரூபாய் நோட்டுகள் 12 பண்டல்களும், வெட்டப்படாத 500 ரூபாய் நோட்டு பண்டல்கள் 13ம் அடங்கும். இவற்றுடன் நவீன பிரிண்டர்கள் மற்றும் செல்போன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இளவரசன் தலைமையிலான கும்பல், 50 ஆயிரம் ரூபாய் அசல் ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளைத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த மோசடிக்கு உடனிருந்த உதயகுமார், தயா என்ற குமரேசன், லோகநாதன், செந்தில் ஆகிய நான்கு பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.