சென்னை உயர்நீதிமன்றம் : உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அக்டோபர் 9 ஆம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் :
உயர்நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு எதிராகவும், மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கில் புதிதாக எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்கள் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த பதில் மனுக்களை படித்துப் பார்த்த நீதிபதிகள், வார்டு மறுவரையறை செய்வதற்காக ஆணையம் அமைத்து அவசர சட்டம் பிறப்பித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, எந்த அடிப்படையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பதில் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வார்டு மறுவரையறை தொடர்பான பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.