உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு லஞ்சம் பெற்றதாகக் கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியை, 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரின், பணி நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் கணபதியை சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜுவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிரடியாக உத்தரவிட்டார்.
துணைவேந்தர் மீதான புகாருக்கு ஆதாரங்கள் குவிந்து வரும் நிலையில் அவருக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட பேராசிரியர்கள் குறித்து மாணவர்கள் ஏராளமான தகவல்களை கூறினர். அதன்பேரில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் மீது புகார் தெரிவித்தவர்களிடம் நடந்து வரும் விசாரணை இன்னும் சில நாட்களில் முடிவடையும். அதன்பிறகு இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கணபதியை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸிடம் இதுதொடர்பான விவரங்களை ஏற்கனவே அளித்துவிட்டதாகக் கூறி விசாரணைக்கு கணபதித் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கணபதியை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். கணபதியிடம், வரும் 16ம் தேதி மாலை 6.30 மணி வரை போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல், சிறையில் சிறப்பு முதல் வகுப்பு அளிக்க வேண்டும் என்று கோரி கணபதி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை (13.2.2018) விசாரணைக்கு வருகிறது.
மேலும், இந்த நான்கு நாள் விசாரணையில் கணபதியை துன்புறுத்தக் கூடாது என நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.