அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் கைதான ஞானசேகரன் மீது திருட்டு வழக்குகள் இருக்கும் நிலையில், அவரை மார்ச் 10-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஞானசேகரனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் பல்வேறு வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சொகுசு பங்களாக்களில் அவர் கொள்ளையடுத்ததை போலீசார் தெரிந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் இருப்பதாகக் கூறி, அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், கடந்த 2019-ஆம் ஆண்டில் கானத்துர் பகுதியில் கொள்ளையடித்து ஞானசேகரன் சிறை சென்றது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், பகல் நேரத்தில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன், இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, கூகுள் மேப் மூலமாக சொகுசு பங்களாக்களை கண்டறிந்து அவற்றை நோட்டமிட்டு கொள்ளை அடித்ததாக போலீசார் விசாரணையில் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், ஞானசேகரனிடமிருந்து 120 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் பாதியை தனது 3 மனைவிகளுக்கு வழங்கிய ஞானசேகரன், மீதி பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், ஞானசேகரனை போலீசார், ஆலந்தூர் மாஜிஸ்திரேட் முன்பு இன்று (பிப் 24) ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து, மார்ச் 10-ஆம் தேதி வரை ஞானசேகரனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.