யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆகியோர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களையும், வீடியோக்களையும் யூடியூபா் சாட்டை துரைமுருகன் வெளியிட்டார். இதுதொடா்பாக போலீஸார் அவரை கைது செய்தனா்.
பிறகு, சாட்டை துரைமுருகன், இனிமேல் இது போல அவதூறாக பேச மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி மொழி வழங்கியதன் அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார்.
ஆனால் ஜாமினில் வெளிவந்த பிறகு மீண்டும் துரைமுருகன் அவதூறாக வீடியோ பதிவிட்டதாக அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நிபந்தனையை மீறி செயல்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை ரத்து செய்யுமாறு காவல்துறை தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த, நீதிபதி புகழேந்தி " மனுதாரர் நீதிமன்ற உத்தரவை மீறியது உறுதியாகிறது. ஆகவே சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து செய்யப்படுகிறது. ஒப்பந்த விதிகளை மீறுகையில், சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிர்வாகம் அந்த வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், அவர்களும் குற்றவாளிகளே. ஆகவே, நடவடிக்கை எடுக்கத் தவறும் சமூக வலைதளங்கள் மீதும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். வீடியோக்களை அகற்றலாம் " என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“