மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி, ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, அந்த அரசாணைகளை ரத்து செய்து கடந்த மாதம் தீர்ப்பளித்தார்.மேலும், உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக் ஆகிய இருவரிடம் வழங்கினார்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமாா் சுகுமார குருப் ஆகியோர் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இன்று காலை தீர்ப்பை வாசித்தனர்.
அப்போது கூறியதாவது, "ஜெயலலிதா இல்லம் பொதுநோக்கம் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை. இவ்வழக்கில் அவரது உத்தரவு சரிதான்" என தீர்ப்பளித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil