திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம், திருக்குற்றால ஸ்வாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக அனுபவித்து வருபவரை எட்டு வாரங்களில் காலி செய்ய உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் அறநிலைய துறை அதிகாரிகளின் தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
குற்றாலத்தில் உள்ள திருகுற்றால ஸ்வாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உணவகம் நடத்தி வந்தவர் தனசேகர். அந்த இடத்தை காலி செய்ய கோரி அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகை காலம் முடிந்தும் மனுதாரர் ஆக்கிரமித்துள்ளதாகவும், 20 ஆண்டுக்கு 35 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கோயில் நிலத்தை அபகரிக்க மனுதாரர் குடும்பத்தினர் முயற்சிப்பது தெரிவதாக கூறிய நீதிபதி, இத்தனை ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகளின் நடத்தை குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.
கோயில் சொத்துக்களை பராமரிக்கும் விஷயத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டாமல் கோயிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் அதிகாரிகள் உடந்தை இல்லாமல் கோயில் நிலத்தை இத்தனை ஆண்டுகள் அனுபவித்திருக்க முடியாது எனக் கூறி, அதிகாரிகாளின் தொடர்பு குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, கோயில் நிலத்தை எட்டு வாரங்களில் காலி செய்ய உத்தரவிட்டார்.