பேனர்கள் அகற்ற உத்தரவு: சென்னையில் இன்று நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவிற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுகவை நிறுவியவருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (செப்.30) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அரசு விழாவாக மாலை 4 மணிக்கு கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொள்கின்றனர்.
இந்த விழாவுக்காக சென்னை அண்ணா சாலை, பசுமை வழி சாலை, கிண்டி ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதால் விதிமீறல் பேனர்களை அகற்றக்கோரியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையில் டிராபிக் ராமசாமி புகார் அளித்தார்
போலீஸார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹிலரமானியிடம் முறையிட்டதையடுத்து, நீதிபதி எஸ்.மணிக்குமார் அமர்வு விசாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கென அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், “அரசு விழா என்பதால் 50 பேனர்கள் வைக்க அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசைத் தவிர்த்து பிறருக்கு நந்தனம், கத்திப்பாராவில் 164 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அனைத்தும் சேர்த்து நிகழ்ச்சி நடைபெறும் மைதானம் அமைந்துள்ள 9 மண்டலத்தில் 279 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தவிர்த்து, கட்சியினர் ஆர்வத்தில் வைத்த பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் கலந்து கொள்ளாதது ஏன்?