நகை திருட்டு வழக்கு விசாரணையில் உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என கூறி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகையும் சுமார் இரண்டு ஆயிரம் ரூபாய் பணமும் திருடியதாகவும் இந்த நகையின் மதிப்பு 4 லட்சத்து 7ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை வழக்கும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் பள்ளபட்டி காவல் நிலையம் நகை திருட்டு தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். திருடப்பட்ட
நகையை திரும்ப பெற்றதாக குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். அதன் பிறகு அந்த 2 இரண்டு குற்றவாளிகளும் காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
திருடிய நகையை தன்னிடம் ஒப்படைக்க கோரி இரண்டு காவல் நிலையத்தில் சென்று கேட்ட போது எந்த தகவலும் காவல்துறையினர் கொடுக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை கண்கானிப்பாளரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நகை திருட்டு தொடர்பான வழக்கில் காவல்துறை சார்பில் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என்றும் தெரிவித்தும். இந்த வழக்கில் காவல்துறை முறையாக புலன் விசாரணை நடத்த வில்லை என்று கூறி குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது. எனவே இந்த திருட்டு தொடர்பாக காவல் துறைக்கு உடந்தை இருப்பதாகவும் எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிராகஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட நீதிபதி, இந்த வழக்கில் சேலம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த நிலை அறிக்கையை ஏற்று கொள்ள முடியாது. விசாரணை சரியான முறையில் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. மேலும் காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தொடர்பு இருப்பதால் அவர்கள் விசாரணை செய்தால் முறையாக இருக்காது.எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம் செய்வதாகவும், சிபிசிஐடி எஸ்.பி அந்தஸ்து பெற்ற அதிகாரி இந்த விசாரணை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.