கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கைதான சயான், மனோஜ் ஆகியோர் மீது போதிய ஆதாரங்கள் இல்லாததால் சிறைக்கு அனுப்ப முடியாது என எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று பேர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரத்தை கடந்த வெள்ளி கிழமை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இடம்பெற்ற அனைவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அவர்கள் இருவரையும் விமானம் மூலம் திங்கட்கிழமை அதிகாலையில் சென்னை கொண்டு வந்த மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், எழும்பூரில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர். அப்போது போலீசாரிடம் நீதிபதி, என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு காவல்துறையினர் அளித்த பதிலும், உரிய ஆதாரங்களும் போதுமானதாக இல்லை எனவும் சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது? என சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும் சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே சயான், மனோஜை நீதிமன்ற காவலில் அனுப்ப முடியும் என நீதிபதி சரிதா திட்டவட்டமாக தெரிவித்தார். சுமார் 4 மணிநேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பின், போலீசார் அளித்த தகவல் போதுமானதாக இல்லை எனக்கூறி கைதானவர்களை நீதிமன்றக் காவலில் சிறைக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சயான், வரும் 18ம் தேதி இரண்டு ஜாமீன்தாரர்களுடன் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டதாக குறிப்பிட்டார்.