குற்றாலம் அருவிகளில் வெள்ளம்: தொடர் சாரல், குளிக்க தடை

குற்றாலத்தில் இதமான சாரல், குளுகுளு தென்றல், மெல்லிய வெயில் என சீஸனுக்கான அத்தனை அம்சங்களும் துல்லியமாக பிரதிபலிக்கின்றன.

குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து சாரல் அடிப்பதாலும், தண்ணீர் வரத்து அதிகரிப்பாலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் சீஸன், தென் மேற்கு பருவமழை தொடங்கியதும் களை கட்டிவிடுவது வாடிக்கை! இந்த ஆண்டும் ஜூன் முதல் வாரம் மிகச் சரியாக சீஸன் ஆரம்பித்திருக்கிறது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு குற்றாலம், தென்காசி பகுதிகளில் ரம்மியமான சாரல் அடிக்கிறது.

தமிழ்நாட்டின் வட பகுதிகளில் வெயில் வெளுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் குற்றாலத்தில் இதமான சாரல், குளுகுளு தென்றல், மெல்லிய வெயில் என சீஸனுக்கான அத்தனை அம்சங்களும் துல்லியமாக பிரதிபலிக்கின்றன.

குற்றாலம் சுற்றுப் பகுதிகளில் இன்றும் (ஜூன் 8) காலை முதல் சாரல் இருந்து வந்தது. குற்றாலத்தில் இருந்து சுமார் 25 கி.மீ கிழக்கே ஆலங்குளம் வரை சாரலின் சிலுசிலுப்பு இருந்தது. அதைத் தாண்டி திருநெல்வேலியைத் தொட்டால் சாரலின் சுவடே இல்லை.

அதேசமயம் செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை பகுதிகளில் மலையோரம் சாரல் கசிவால் ஊட்டி, கொடைக்கானலை நினைவுபடுத்தும் சூழல் நிலவியது.

குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் இன்று காலையில் மிதமாக தண்ணீர் விழுந்தது. மதியத்திற்கு மேல் தண்ணீர் வரத்து அதிகம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் வார இறுதி நாளில் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாளையும், நாளை மறுநாளும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவில் சாரல் தொடர்ந்தால், நாளையும் குளிக்க அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு! பழைய குற்றாலத்தில் பயணிகள் குளிக்க முடிகிற அளவுக்கே இன்று தண்ணீர் கொட்டியது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close