அதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட்டன. இதற்கு தலைமையாக தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் தன்னை ஏற்று கொண்டுள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடை கோரியும், அதிமுக பெயர் பயன்படுத்த கூடாது என்றும் டிடிவி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மனுதாரருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து வெற்றிவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ராஜீவ் சக்தேர் அமர்வு, பொது குழு கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுபட்டது என தெரிவித்ததது.
இந்த மனுவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,அதிமுக அம்மா அணி சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையிலான அணி என கூறுவது தவறு. அதிமுகவின் இரு அணிகள் இணைந்துவிட்டன. இதற்கு தலைமையாக தேர்தல் ஆணையம் மற்றும் கட்சியினர் தன்னை ஏற்று கொண்டுள்ளனர்.
அதிமுகவின் தலைவராக டிடிவி தினகரனை முன்னிறுத்தும் நோக்கில் தான் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இந்த பொது குழு நடத்துவதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு என்பதை மனுவில் கூறவில்லை.
டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இணைப்பு மனு தாக்கல் செய்துள்ளதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர சட்டத்தில் இடமில்லை.
பொதுக்குழு கூட்டத்தில் 2128 பொது குழு உறுப்பினர்கள் 1828 பேர் கலத்து கொண்டனர். கட்சியின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுகுழு கூட்டத்தை தடுத்து நிறுத்தவே மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பொதுகுழு கூட்டம் நடந்து முடிந்துவிட்டதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுகுழு நடத்துவது குறித்து ஆகஸ்ட் மாதமே அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பபட்டது.
இரு அணிகளும் பொதுகுழு கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை. நீதிமன்றத்திற்க் தவறான தகவல்களை வழங்கிய மனுநாரர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை. மனுதாரர் எந்த அணியை சேர்ந்தவர் என்று மனுதாரர் கூறவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் கூறியிருந்தார்.
இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 30-ம் தேதிக்கு ராஜீவ் ஷக்தேர் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் தள்ளிவைத்தனர். அப்போது பதில் மனு தாக்கல் செய்யாத மதுசூதனன் உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.