தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு அதிக பாடங்கள் பயிற்றுவிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கும், சி பி எஸ் இ-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள், முதல் வகுப்பிலேயே எட்டு பாடங்களை பயிற்றுவிக்கின்றன. அதேசமயம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல் வகுப்பில் மூன்று பாடங்களே பயிற்றுவிக்கப்படுகிறது. அதுவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்த புத்தகங்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகளில் தனியார் புத்தகங்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகளுக்கு அதிக பாடங்களை திணிக்க கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி சி.பி.எஸ்.இ உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 3 வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, விளையாடிக் களிக்க வேண்டியவர்களை வாய் மூடி மவுனியாக இருக்கச் செய்து குழந்தை பருவத்தை வீணடிக்கச் செய்கிறோம் என வேதனை தெரிவித்தார்.
இந்த வழக்கை பொருத்தவரை பாடங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற மனுதாரர் மனுவை மத்திய அரசும், சி.பி.எஸ்.இ- யும் நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.