நடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஏழுமலை என்ற உறுப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பதவிக்காலம் முடிந்த செயற்குழு, ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தலை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டுள்ளது.மேலும், சங்க நடவடிக்கைகள் பற்றி கேள்வி கேட்ட பல உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதால், முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் பட்டியலை தாக்கல் செய்த நடிகர் சங்கம் தரப்பு வழக்கறிஞர், 3,171 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். சங்கத்துக்கு முறையாக சந்தா செலுத்தாத 53 பேர் நீக்கப்பட்டுள்ளதாகவும், நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறிய அவர், தேர்தல் அறிவிப்பு முறையாகவே வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், நடப்பாண்டு 52 உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து, மரணமடைந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தாக்கல் செய்ய நடிகர் சங்கம் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.