ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும். 1994 ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணையின்படி 20 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தங்களுக்கு அது போன்ற எந்தவிதமான சலுகையும் அரசு காட்டப்படவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி தமிழக அமைச்சரவை, தமிழக ஆளுநருக்கு ஒரு பரிந்துரை அளித்து இருந்தது அதன் அடிப்படையில் நான் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சிறையில் உள்ள மீதமுள்ள 6 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரை கடிதம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநருக்கு இந்த கடிதம் கிடைக்கப் பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அவர் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை அதனை அமல்படுத்தபடவில்லை.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறி தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியும், முதலமைச்சர்க்கு பிப்ரவரி 23 ஆம் தேதியிம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
எங்களை மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆளுனருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது என வாதிடப்பட்டது.
அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் எனவும் நளினி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் , ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் வாதிட்டார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆர்.சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர்க்கு உத்தரவிட கோரி மனு விசாரணைக்ககு உகந்தது இல்லை எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.