தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுந்த இடத்தை தேர்வு செய்து, வரும் ஜீன் 14 ஆம் தேதிக்குள் விரிவாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்ரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு, 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக .கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் இடம் தேர்வு, கட்டுமானம் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கி விட்டன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு ஆய்வு நடத்தியும் எந்த முடியும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் அமைய உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட, மத்திய சுகாதாரத் துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஏற்கனவே, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன். அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள் டிசம்பர் 31, 2017 க்குள் இறுதி முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இருப்பினும் மத்திய சுகாதாரத் துறை செயலர் இதை மதித்து நடவடிக்கை எடுக்கவில்லை. என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி பதில் தர மத்திய அரசுக்கு உத்ரவிட்டுள்ளனர். வரும் ஜீன் 14-க்குள் எய்ம்ஸ் அமைய உள்ள தகுந்த இடத்தை தேர்வு செய்து, சாதகமான பதிலை, மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்ரவிட்டுள்ளனர்.