தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டது இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ்., நிறுவனம்.
இந்நிறுவனத்திற்கு மக்கள் முதலீடு செய்தால், 10 முதல் 25 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக தெரிவித்திருந்தனர். இதன்மூலம், இவர்கள் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்நிறுவனம் 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது 200 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், மோசடி செய்ததாக, ஐ.எஃப்.எஸ்,. உடன் சேர்ந்து ஆறு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு தொடர்பாக, நிறுவன இயக்குனர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார், குப்புராஜ், ஜெகனநாதன் உள்ளிட்ட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும், சென்னையில் உள்ள நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேர் மட்டும் ஆஜராகினர். ஆகையால், இவர்களை கைது செய்து பிப்ரவரி 28 ம் தேதி ஆஜர்படுத்தும்படி புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.