சென்னை அடுத்த ஆவடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் குழு ஒன்று, 12-ம் வகுப்பு மாணவர் ஒருவரைத் தாக்கியுள்ளது. மேலும் இந்தச் செயலை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதுடன், பாதிக்கப்பட்ட மாணவரை கேலி செய்துள்ளனர். இதன்காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது, இந்தச் சம்பவம் கடந்த ஆக.7 ஆவடி, காமராஜர் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் தனியாக செல்லும்போது, கால் வைத்து இடிப்பது, சைக்கிளில் வந்து மோதுவது என, அதே பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த மாணவரை, அதே மாணவர்கள் கொண்ட குழு ஒன்று வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத்திற்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட மாணவர்கள், அவர்களது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். எனினும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவரைக் கேலி செய்யும் விதமாக, இந்தத் தாக்குதல் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "இந்தச் சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் தலையிட்டதால், அன்று மாலையே எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதால், என்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறையில் புகார் அளித்தேன்" என்றார். மேலும், மாணவர் ஒருவர் தன்னை வாய்மொழியாகத் திட்டியதாகவும், அதைக் கேள்வி கேட்டபோது, அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னைத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார்.