மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பர் துவங்கிய பள்ளிக்கு சொந்தமான சொத்துக்களை விற்றது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்கும்படி தமிழக பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்த சங்கு கணேசன், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பர். காமராஜரின் விருப்பப்படி, வடக்கன் குளத்தில் பள்ளி ஒன்றை ஆரம்பித்து, அதற்கு தன் சொத்துக்களை தானமாக எழுதி வைத்தார். இந்த பள்ளியையும், சொத்துக்களையும், வடக்கன் குளம் நாடார் மகாஜன சங்கம் நிர்வகித்து வந்தது.
தற்போது இந்த சங்கத்தின் தலைவராக உள்ள அருள்ராஜன், தேர்தல் நடத்தாமல் தன் உறவினர்களை நிர்வாகிகளாக நியமித்து, 9 ஆண்டுகளாக பதவி வகித்து வருவதாகவும், சங்கத்திற்கு சொந்தமான ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்று, அதில் பெரும்பகுதியை கையாடல் செய்ததாகவும் கூறி, சங்கு கணேசனின் பேரன் நாகராஜன், திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடமும், தமிழக டி.ஜி.பி.யிடமும் புகார் அளித்துள்ளார்.
இது உரிமையியல் விவகாரம் என்பதால், பதிவுத் துறையை அணுகும்படி காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன்படி, தமிழக பதிவுத் துறை ஐ.ஜி.க்கும், திருநெல்வேலி மாவட்ட பதிவாளருக்கும் புகார் அளித்துள்ளார். இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நாகராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலிக்கும்படி பதிவுத்துறை ஐ.ஜி.,க்கு உத்தரவிடலாம் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார்.